இருபுறமும் வெற்றி
வெற்றி பெறுவதற்கு மனித உறவுகளே மகத்தான துணைபுரிகின்றன.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
விளையாட்டில் “தோல்வி – வெற்றி” (Lose-win) நிலை உண்டு. ஆனால் வாழ்க்கையில் “வெற்றி வெற்றி” என்ற (Win – Win) நிலை மட்டுமே நிலையானது.
இலட்சியம்
நீங்கள், மற்றவரை தோற்கடித்து பெறும் வெற்றி நிலையானது அல்ல; அது நிம்மதியைக் கொடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே இந்த அடிப்படைத் தத்துவத்தையும் புரிந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க இலட்சியம் இருக்கலாம். அவர்களது இலட்சியம் பொது நன்மை தரக்கூடியதாக இருக்குமானால் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு உங்கள் உதவிக்கரம் நீளும்போது அவரும் உங்களுக்கு உதவ முன்வருவர்.
அவ்வாறு இல்லாமல் அவரின் பாதையில் நீங்கள் தடைக்கல்லாக மாறும்போது அவரும் உங்களின் பாதையில் முட்களை வீசத் தொடங்குவார். பின்னர், அம்முட்களை அகற்றவே உங்கள் வாழ்நாள் போதாதபோது உங்களால் எப்படி முன்னேற முடியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
காற்றை நிராகரிக்க முடியாது
மற்றவரை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமல்ல;நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவதுதான் நமது வாழ்க்கையின் நோக்கம்.
மற்றவர்களைவிட நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமானால் உங்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். மேலும் உங்களின் உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் தற்போது எட்டு மணி நேரம் உழைக்கிறீர்கள் என்றால்அதை இரட்டிப்பாக்கவேண்டும். உளிபடாத கல் சிலையாவதில்லை அதுபோல உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.காற்றை நிராகரித்து விட்டு உங்களால் உயரமுடியாது. அதுபோல உழைப்பை விவாகரத்து செய்துவிட்டு உங்களால் உயர முடியாது.
ஒத்துழைப்பு மலரட்டும்
ஆகவே, மற்றவர்களைப் பற்றி குறை கூறவும், மற்றவர்கள்மீது அவதூறு சொல்லவும் உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா?
ஒவ்வொருவரும்ஒவ்வொருவழியில்சென்றுகொண்டுள்ளார்கள். அவர்களின் பயணத்தால் இச்சமுதாயத்திற்கு தீங்கு நேராத வகையில் எந்தப் பயணமும் குறையுடையது அல்ல. மேலும், மற்றவர்களை குறை கூறுவதால் அவர்களின் எதிர்ப்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
ஒருவருக்கு நண்பர்கள் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பகைவர்கள் இருக்கக் கூடாது. உங்கள் கருத்துக்குப் புறம்பான கருத்துக்கொண்டவர்கள் உங்களின் பகைவர்கள் அல்லர். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதுவே பகையுணர்ச்சியாக மாறிவிடக் கூடாது.
நாம் சந்திக்காதவர்கள்கூட நண்பர்களாக இருக்கலாம்.ஆனால்,நாம் சந்திக்காத எவரும் பகைவர்களாக இல்லை. இதற்கு என்ன காரணம், நமது உறவில் அவர்கள் ஏதோ குறை கண்டுள்ளார்கள் அல்லது நம்மை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை அல்லது அவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றுதானே அர்த்தம்.
ஒவ்வொருவருடைய நோக்கமும் வெவ்வேறாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். மேலும், நோக்கம், ஒன்றாக இருந்து சிலசமயங்களின் பாதை வெவ்வேறாக இருக்கும்போதும் இவ்வாறு நிகழலாம்.ஆகவே நட்பைதக்கவைத்துக்கொள்ள எளியவழி குறை கூறுவதைத் தவிர்ப்பதுதான்.
தென்றலுடன் கை கோர்க்கும் மென்மையோடு செயலாற்றுங்கள். உறவின் கதவுகளை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.முயற்சி செய்தால் வானம்கூட குனிந்து உங்களுக்கு குடை பிடிக்கும்.
thanks boss to delivered the super article
ReplyDelete