Friday, November 12, 2010

வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை

வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை



ஒருவரது வாழ்வின் வெற்றி என்பது அவரது வாழ்க்கைப் படிநிலை தொடர்ந்து ஏற்றப்பாதையில் செல்கிறதா என்பதைப் பொறுத்தது. 

ஏற்ற இறக்கமான வாழ்க்கை என்பது சராசரி வாழ்க்கை. 

தொடர்ந்து இறக்க நிலையில் இருக்கும் ஒரு வாழ்க்கை என்பது தோல்வியின் அடையாளம்.

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பது தோல்வியுற்றவர்களுக்கான உற்சாக வார்த்தை. ஆனால் என்றும் முதல் படியிலேயே நின்று கொண்டிருப் பவர்களை என்ன சொல்வது? இரண்டாவது படிக்கு செல்வதற்கான முயற்சி என்பது மிகவும் அவசியம். ஒரு சின்ன வெற்றி. அது போதும். 

எடுத்த எடுப்பிலேயே மாபெரும் வெற்றி என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால் அதைத் தொடர்ந்து வருவது ஒரு சின்னத் தோல்வியாக இருந்தால் கூட சில நேரங்களில் அதைத் தாங்க முடியாது போகலாம். முதல் படியில் இருந்து விழும்போது பெரிதாக அடிபடாது. ஆனால் உச்சிப் படியில் இருந்து விழும்போது அந்த வீழ்ச்சி மிகப் பெரியதாக இருக்கும். 

ஒவ்வொரு படியிலும் பிடிமானம் மிக முக்கியம். ஒவ்வொரு படியாக மேலேறிச் செல்பவருக்கு அந்தப் பிடிமானம் வலுவாக இருக்கும். ஒரேயடியாக மேல்படிக்கு தாவிச் செல்பவருக்கு பிடிமானமே இருக்காது.

கிடைக்கும் வெற்றி தனக்குத் தகுதியானது தானா என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியான வெற்றி ஒரு போதும் தன்னைவிட்டு நீங்காது. தகுதியற்ற வெற்றியோ நிலையற்றது.

பரீட்சையில் காப்பியடித்து வெற்றி பெறுபவன் தற்காலிகமாக வெற்றி பெறலாம். அவன் அதையே தொடர்ந்து தேர்வில் வெற்றி பெற உபயோகித்தால் ஒருநாள் கண்காணிப்பாளரால் பிடிக்கப் படுவான். அன்றோடு அவன் வாழ்க்கை முடிந்தது.

போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பலர் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். ஒருநாள் அவர்களின் சான்றிதழ்கள் பொய்யானவை என்று கண்டறியப் பட்டது. அதுவரை அவர்கள் செய்து வந்த பணி அவர்களிடமிருந்து உடனடியாக பறிக்கப் பட்டது. அந்த வேலையை நம்பி அவர்கள் வாழ்க்கையில் கட்டியிருந்த கனவுக் கோட்டைகள் அனைத்தும் ஒரே நாளில் சரிந்து விட்டன. அவர்களை நம்பியிருந்த அவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றமும் அவமானமும் அடைந்தனர். நேர்மையற்ற வெற்றிகள் ஒருபோதும் நிலைக்க மாட்டாது.

நேர்மைக்கு அடுத்தபடியாக நேரந்தவறாமை மிக முக்கியம். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியம். அதை கொடுத்த காலக்கெடுவுக்குள் முடிப்பதும் அவசியம். அடுத்தவர் நமக்கு கெடு விதிக்குமுன்பே நமக்கு நாமே கெடு விதித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கெடுவிற்குள் குறித்த செயலை முடிப்பேன் என்று உறுதி கொள்ள வேண்டும். உண்மையில் அடுத்தவர் 10 நாட்களில் ஒரு செயலை முடிக்க கெடு வைத்தால் நமக்கு நாமே வைக்கும் கெடு 7 அல்லது 8 நாட்களாக இருக்கலாம். அப்படி நமது கெடுவிற்குள் காரியத்தை முடித்து விட்டால் மிச்சப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நமக்கு நிம்மதியாக இருக்கும். அல்லது முன்கூட்டியே முடித்ததற்கான பாராட்டு கிடைக்கும். இதற்கு மாறாக பத்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை 12 நாட்களோ 15 நாட்களோ நீட்டினால் மேலதிகாரி, அல்லது வாடிக்கையாளரிடமிருந்து வரும் மோசமான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அது மேலும் மனதை தளர்ச்சியுறச் செய்யும். அதுவரை உழைத்த உழைப்பும் அதில் கிடைத்த வெற்றியும் தாமதம் என்ற ஒரே காரணத்தினால் அங்கீகரிக்கப் படாமல் போகலாம்.

பள்ளியில் தாமதமாக வரும் மாணவனோ, மாணவியோ பாடங்களை ஒழுங்காக படிக்க முடியாது. பல பாடங்கள் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் வெற்றிடமாக இருக்கும். கடைசியில் தேர்வுத் தாளிலும் பல கேள்விகள் விடையற்றதாக இருக்கும்.

பணிக்குத் தாமதமாக வரும் பணியாளரின் பணிக்குறிப்பேட்டில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும். அவரது பதவி உயர்வுகள் பல ஆண்டுகள் தாமதமாகலாம். அவருக்குக் கீழேயுள்ள பலர் அவரைக் கடந்து மேலே செல்லலாம்.

அடுத்தது வாக்குத் தவறாமை. அடுத்தவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்குமுன் நன்றாக யோசித்துத் தான் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் இந்த வகையில் சேராது. அவர்கள் மக்களின் மறதியை நம்பி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கு கின்றனர். மக்களும் அதை நம்பி ஓட்டுப் போட்டு விடுகின்றனர். வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அடுத்த தேர்தலின் போது மட்டுமே மீண்டும் தலைகாட்டுகிறார். மீண்டும் அதே பழைய வாக்குறுதியை புதிய வாக்குறுதியாக மீண்டும் அளிக்கிறார். இவர்களும் மறுபடி வாக்குகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிகளில் எந்த உண்மையும் இல்லை. 

ஆனால் தனிநபர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் கவனம் தேவை. உதாரணமாக ஒருவர் கடன் கேட்கிறார். இப்போது என்னிடம் இல்லை. நாளை வா தருகிறேன். என்கிறோம். மறுநாள் அவர் அதை நம்பி வந்து நிற்பார். முந்தின நாள் சொன்னது மறந்திருக்கலாம். அல்லது முந்தினநாள் சும்மா தப்பிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். என்றாலும் இப்போது மீண்டும் ஒருமுறை முந்திய வாக்குறுதிக்காக சமாளிக்க வேண்டியிருக்கிறது. அந்த வாக்குறுதியை ரத்து செய்யும் விதமாக என்னிம் பணமே இல்லை. இதற்காக நீங்கள் மறுபடி என்னிடம் வர வேண்டாம். என்று உறுதியாக சொல்லி விடலாம். அப்போது அவர் நம்மை நம்பியிராமல் வேறொருவரை நாடிச் செல்வார். அதற்குப் பதிலாக தொடர்ந்து நாளைவா, மறுநாள் வா என்று அலைக்கழிப்பது அவரை உங்கள் வாக்குறுதியை நம்பி ஏமாறச் செய்யும்.

ஒருவர் தன்மகளின் திருமணச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை நண்பரின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவசர மருத்துவச் செலவுக்காக தந்தார். நண்பரும் அலுவலக பிஎப் சேமிப்பிலிருந்து கடன் பெற்று திருப்பித் தருவதாக வாக்களித்தார். இவருக்கு மகளின் திருமணத் தேதி நெருங்க ஆரம்பித்தது. நண்பரிடம் கேட்டபோது பிஎப் கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். வந்தவுடன் தந்து விடுவேன் என்றார். ஆனால் நண்பரோ அந்தப் பணம் வந்தவுடன் இவருக்குத் தராமல் வேறு காரியத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இவருடைய மகளின் திருமணமே நின்று போனது. நண்பரின் வாக்குறுதியை நம்பி அவரது அவசரத்துக்கு உதவியதால் இவர் அவமானப் பட வேண்டியதாயிற்று.

ஒரு கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் வீட்டு உரிமையாளரிடம் இன்னும் இருபது நாட்களுக்குள் வீட்டை முடித்து கையில் தருகிறோம். என்று சொல்கிறார் வீட்டு உரிமையாளரும் அதை நம்பி கிரகப் பிரவேசத்துக்கு நாள் குறிக்கிறார். நண்பர்கள் உறவினரையும் அழைக்கிறார். ஆனால் கட்டிட பொறியாளர் குறிப்பிட்ட நாளில் வேலையை முடிக்க வில்லை. அதனால் கிரகப் பிரவேசத்தை மாற்ற வேண்டியதாயிற்று. காரணம் கேட்ட உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் பொறியாளர் வாக்குறுதியை நிறைவேற்றாததை வீட்டு உரிமையாளர் சொல்கிறார். இதனால் அந்த பொறியாளருக்கு தங்கள் வீட்டின் கட்டுமானப் பணிகளை தர எண்ணியிருந்த பலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்கின்றனர். எனவே நிறைவேற்ற இயலாத வாக்குறுதி ஒன்றினால் அந்தப் பொறியாளர் பல வாடிக்கையாளர்களை இழக்கிறார்.

இந்த நிலைகளை ஒருவர் கடந்து விட்டாலே மேல் நோக்கிய வாழ்க்கைப் படிகளில் ஏறத் தொடங்கி விட்டார் என்று பொருள்.

No comments:

Post a Comment