Friday, November 12, 2010

எண்ணமும் நடத்தையும்

எண்ணமும் நடத்தையும்

*ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்.  அதுவாகவே இருக்கிறான்*  என்னும் முதுமொழியானது மனிதனின் இருத்தலையே தழுவி நிற்பதோடல்லாமல்,  அவனுடைய ஒவ்வொரு நிலையையும் சூழ் நிலையையும் சுட்டிக் காட்டுகிறது. 

ஒரு மனிதன் என்பவன் அவன் என்ன நினைக்கிறானோ அதுவே. 
அவனின் குணமானது, அவனுடைய அனைத்து எண்ணங்களின் தொகுப்பே ஆகும். 

ஒரு செடியானது முளைத்து கிளைத்து வளரும்போது, அது ஒரு விதையில்லாமல் பிறக்கவில்லை என்று அறிகிறோமல்லவா, அதைப் போலவே, மனிதனின் ஒவ்வொரு செயலும், மறைந்திருக்கும் எண்ணம் எனும் விதையிலிருந்தே பிறக்கிறது. 

எண்ணமாக உதிக்காமல், எந்த செயலும் பிறப்பதில்லை. 
இது,  * கண நேரத்தில் செய்துவிட்டேன் *,   *ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் *  என்று சாக்கு சொல்லப்படும் செயல்களுக்கும் பொருந்தும். 

செயல் என்பது எண்ணத்தின் மலராகும்!  மகிழ்ச்சியும் வருத்தமும் அதன் கனிகளாகும்! 

எனவே,  ஒருவன் தன் எண்ணத்தினால் இனிப்பும் கசப்புமான பழங்களை தன் தோட்டத்தில் பிறப்பிக்கிறான்!   விளைவிக்கிறான்! 

மனிதன் என்பவன் ஒரு வரைமுறையின் வளர்ச்சி. 

அவன் வார்த்தெடுக்கப்பட்ட சிலை அல்ல! 

செயல் விளைவுத் தத்துவத்தைப் போலவே,  அதை பொருள் உலகில் நாம் காண்பதைப் போலவே, செயல் எண்ணத் தத்துவமும் உண்மையான உண்மையாகும். 

நேர்மையான,  கடவுள் தன்மை பொருந்திய குண நலனை ஒருவன் பெற்றிருந்தால்,  அது தன்னிச்சையோ அல்லது அதிர்ஷ்டமோ அல்ல! 

மாறாக,  தொடர்ந்து பிடிவாதமாக அவன் பழகி வந்த நல்ல சிந்தனைப் பயிற்சியே ஆகும்! 

மேலான எண்ணங்களை தொடர்ந்து எண்ணி வந்ததன் விளைவே ஆகும்! 

நம்பகமற்ற கெட்ட குண நலன்களும் அது போலவே தொடர்ந்து கீழான எண்ணங்களை எண்ணி வந்ததன் விளைவே ஆகும். 

மனிதன் தன்னையே ஆக்கவோ அழிக்கவோ திறன் கொண்டவன். 
அவன் தன் எண்ணம் எனும் பட்டரையில் தன்னை அழிக்கக்கூடிய திறன் படைத்த ஆயுதங்களை செய்துகொள்கிறான்! 

அதே எண்ணம் எனும் பட்டரையில் தான் வாழ்ந்து மகிழக்கூடிய சொர்க மாளிகையையும் அவனால் உருவாக்கிக்கொள்ள முடியும்!  அம்மாளிகை,  மகிழ்ச்சி,  சக்தி,  அமைதி ஆகியவை குடிகொள்ளும் கோயில்! 

தன் எண்ணத்தை கட்டுப் படுத்தி சரியான வகையில் முறைப்படுத்துவதன் மூலமாகவே மனிதன் திரு உன்னதத்திற்கு ஏறிச் செல்ல முடியும். 

தன் எண்ணத்தை கட்டுப்படுத்தாமல்,  கெட்டது என அறிந்திருந்தும் அதே திசையில் செலுத்துவதன் மூலம் மிருக குணத்திற்கும் கீழாக இறங்கவும் முடியும். 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும்,  இந்த இருவேறு கடை நிலைகளுக்கு இடையே தன் எண்ணங்களால் கட்டுண்டு வாழ்ந்து வருகிறான்! 

மனிதனே அவன் எண்ணங்களின் முதலாளி!

உலகில் எத்தனையோ அழகிய உண்மைகள் உண்டு. 

அவற்றை அவ்வப்போது நம் அகம் மகிழ வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரும் உண்டு. 

ஆனால் இந்த ஒரு உண்மை அவற்றிலெல்லாம் அழகானது!  உன்னதமானது! 

இது கனி கொடுக்கும் உன்னத சத்தியம்! இது தன்னம்பிக்கை ஊட்டும் பெரிய உண்மை! 

*மனிதன் எண்ணத்தின் எஜமானன். 
குண நலன்களை உருவாக்கும் குயவன். 
தன் நிலையை உருவாக்கி செப்பனிடுபவன். 
சூழ் நிலையை படைத்த சூத்திரதாரி. 
வாழ்க்கையை அமைக்கும் பிரம்மா!* 

மனிதன்,  தன் சக்தி,  யுக்தி,  அறிவுத்திறன்,  அன்பு எல்லாவற்றிற்கும் மேலாக தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் திறன் இவற்றையெல்லாம் உருக்கி ஒரு சாவியாக்கி தன் கையில் வைத்துக் கொள்ள முடியும்! 

அச்சாவி, ஒவ்வொரு சூழ் நிலையையும் திறக்கும் சக்தி கொண்டது! 
சூழ் நிலைகளைத் திறக்கும் சாவிக்கொத்தையே கையில் வைத்துக் கொண்டிருக்கும் மனிதன், தன்னை எதுவாக நினைக்கிறானோ அதுவாக ஆக்கிக் கொள்ள முடியும்! 
முற்றிலும் கைவிடப்பட்ட,  அனைத்து சக்தியையும் இழந்த நிலையிலும்கூட,  மனிதன் தன் நிலையை மாற்றவல்ல சாகஸக்காரன்! 

ஏன் அந்த நிலை அவனுக்கு வந்தது?  தன் எண்ணமெனும் வீட்டை முட்டாள்தனமாக நிர்வகித்ததால் தோல்வி நிலை வந்தது. 

செயல் எண்ணத் தத்துவத்தை புரிந்துகொண்டு,  சுய பரிசோதனை செய்து கொள்ளும் புத்திசாலியாக அவன் மாறும்போது,  புதுவடிவம் எடுக்கிறான்! 

இப்போது அவன் தன் எஞ்சிய சக்தியை ஒருமுகப் படுத்தி, அறிவுடன் அவற்றை இணைத்து, கனிதரும் பயன்களுக்கு தன் எண்ணங்களை செப்பனிடும்போது, இழி நிலையிலிருந்து திரு நிலைக்கு மாறும் விந்தையை செய்கிறான்! 

அவனே தன் எண்ணங்களின் எஜமானன்!  செயல் எண்ணத் தத்துவத்தை அவனுள் உணர்ந்து கொள்வதன் மூலமே,  அவன் தன் நிலையை மாற்ற முடியும்! 

இப்பெரும் கண்டுபிடிப்பு அவனுள் நிகழவேண்டுமென்றால்,  அனுபவம்,  பிரதியிடும் திறன்,  சுய பகுப்பாய்வு ஆகியவை அவசியம். 

மிகுந்த தேடுதல்,  தோண்டுதல் ஆகியவற்றின் பின்னரே தங்கமோ வைரமோ கிடைக்கிறது. 

தன் நிலைக்குக் காரணமான ஒவ்வொரு உண்மையையும் மனிதனால் கண்டுபிடிக்க முடியும். 

தன் ஆன்மா எனும் சுரங்கத்தில் இடைவிடாமல் தோண்டும்பொழுது, அவனே தன் குண நலன்களை உருவாக்கிக் கொண்டவன். தன் வாழ்க்கையை படைத்த குயவன்.   தன் பெரு வாழ்க்கையை கட்டிய வேலையாள். 

அவனால் சந்தேகத்திற்கு இடமின்றி இவற்றை நிரூபிக்க முடியும். 

தன் எண்ணங்களை கவனித்து, நெறிப்படுத்தி மாற்றுவதன் மூலம் அவனுக்கு ஏற்படும் மாறுதல்கள் பிறருக்கு ஏற்படும் தாக்கம்,  சூழ் நிலைகளின் மீது தாக்கம் ஆகியவற்றை நிரூபிக்க முடியும். 

செயலையும் விளைவையும் தொடர்புபடுத்தி பார்ப்பதன் மூலமும்,  தன் சிறு சிறு அனுபவங்களையும் உன்னிப்பாக கவனிப்பதன் மூலமும்,  அன்றாட நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமும்,  புரிந்து கொள்ளுதல்,  அறிவு,  சக்தி ஆகியவற்றின் மீது நம் எண்ணங்களின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ள இயலும். 

*தேடுங்கள், கண்டடைவீர்கள்*  என்ற முதுமொழி இத் தேடுதலுக்கு மிகப் பொருத்தமானதாகும். 

*தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப் படும்*  என்பதைப் போலவே,  பொறுமை,  பயிற்சி,  இடைவிடாத தொடர் முயற்சிகள் மூலம் அறிவுத் திருக்கோயிலை ஒருவன் அடைந்து அதனுள் நுழைய இயலும்! 


No comments:

Post a Comment